நப்கின்களுக்கு விதிக்கப்பட்ட சகல வரிகளும் நீக்கம்!

Mayoorikka
1 year ago
நப்கின்களுக்கு விதிக்கப்பட்ட சகல வரிகளும் நீக்கம்!

பெண்கள், மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்யவும் சுகாதார பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்கிலும் நப்கின் தயாரிப்புக்கான மூலப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நீக்கப்படவுள்ளன. 

இதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் சுகாதார நப்கின்களுக்கு வரிச்சலுகை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 நப்கின்கள் அடங்கிய ஒரு பைக்கெற்றின் விலை 50 முதல் 60 ரூபாயால் குறைவடையும். 

இதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 முதல் 270 ரூபாயாக இருக்கும். இதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் நப்கின்களின் விலைகளும் 18 அல்லது 19 வீதத்தால் குறைவடையும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் உரிய வரிச் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெறவேண்டும் என்பதனால், அதற்கான செயன்முறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய நப்கின் உற்பத்திக்கான பிரதான 5 மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின்போதும் 15 வீத சுங்க இறக்குமதி வரி, 10 முதல் 15 வீத சி.ஈ.எஸ்.எஸ். வரி மற்றும் 10 வீதம் பீ.ஏ.எல்.வரி, ஆகியன நடைமுறையிலிருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் நப்கின்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கும் வற் வரி அறவிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.