ஹர்ஷடி சில்வாவுக்கு பதிலாக ஷரித்த ஹேரத் பெயர் பரிந்துரை செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

#Sajith Premadasa
Prasu
1 year ago
ஹர்ஷடி சில்வாவுக்கு பதிலாக ஷரித்த ஹேரத் பெயர் பரிந்துரை செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கோப் குழுவுக்கு பெயரிடப்பட்டிருக்கும் ஹர்ஷடி சில்வாவுக்கு பதிலாக ஷரித்த ஹேரத் எம்.பியை பரிந்துரை செய்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச பொது நிறுவனங்கள் (கோப்) குழுவில் பணியாற்றுவதற்கு எதிர்க்கட்சியினால் ஹர்ஷடி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. என்றாலும் தற்போது அவர் அந்த பதவியில் இருந்து சுயவிருப்பத்தின் பேரில் பதவி விலகி இருக்கின்றார். அதனால் ஹர்ஷடி சில்வாவுக்கு பதிலாக எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் ஷரித்த ஹேரத்தின் எம்.பியின் பெயரை பரிந்துரை செய்கின்றேன். 

அத்துடன் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு நாங்கள் இந்த சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தோம். அத்துடன் இந்த பதவிகளின் தலைமை பதவிகளுக்கு கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்ரமரத்ன ஆகியோரை பரிந்துரை செய்திருந்தோம். 

அதனை சபாநாயகராக நீங்களும் ஏற்றுக்கொண்டிருந்தீர்கள். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது எமது கோரிக்கைக்கு சபையில் இணக்கம்  தெரிவித்திருந்தார்.

என்றாலும் தற்போது அந்த குழுக்களுக்கான தலைவர் பதவி வேறு முறைமைகளில் வேறு நபர்களை நியமிக்கப்போவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதனால் கோப் மற்றும் கோபா குழுக்களிக் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு கிடைக்கம் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது. 

எனவே அன்று பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மற்றும் சபாநாயகரான நீங்கள் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் கோப் மற்றும் கோபா குழுங்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.