ஹிக்கடுவை பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

Prathees
1 year ago
ஹிக்கடுவை பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

காலி ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் சிறார்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்து வந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பிரபல  போதைப்பொருள் வியாபாரி கலுபே நங்கி மல்லி என அழைக்கப்படும் பபியா மற்றும் அவரது சகாவான பேபி என்ற பெண்ணுமே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சுமார் ஒன்பது கிராம் ஹெரோயினுடன் பாடசாலை மைதானத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடையவர், மற்றைய சந்தேக நபர் 22 வயதுடையவர். அவர்கள் ஹிக்கடுவ களுபே பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த பாடசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்ட போது, ​​பெண் கடத்தல்காரர் திடீரென தனது கையில் இருந்த ஒன்றை விழுங்க முற்பட்டதாகவும்இ ஆனால் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அதனை தடுத்ததாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி  விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த பெண்ணும் ஏனைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.