தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை என்ன செய்யவேண்டும்? உலக வங்கியின் அதிகாரி கருத்து
இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்குஆட்சி முறையை மேம்படுத்தவேண்டும்,மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என உலக வங்கியின் தென்னாசியாவிற்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மெர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உண்மையான அடிப்படை மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அவசியம் என ஹன்ஸ் டிம்மெர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் கடந்த காலங்களில் கடினமான சூழ்நிலைகளில் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல வெளிப்புற அதிர்ச்சிகள் காரணமாகவே இலங்கை இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ள அவர் உள் அதிர்ச்சிகளும் இந்த நிலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேரளவு பொருளாதாரத்தை கையாள்வதில் ஏற்பட்ட தவறுகளும் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் என உலக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்தை மேம்படுத்துவது இலங்கை முன்னெடுக்கவேண்டிய முக்கியமான சீர்திருத்தம் என தெரிவித்துள்ள டிம்மெர் இதன் மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கான தளம் காணப்படுவதை உறுதி செய்யவேண்டும், எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு முறையை தவறாக பயன்படுத்துவதற்கும் ஊழலில் ஈடுபடுவதற்கும் சிறியளவு வாய்ப்பு கூட காணப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வினைத்திறன் மிக்க பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதே முதல் முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படவேண்டும் மக்கள் தொகையில் அதிகளவானவர்கள் உற்பத்தி திறனை பெறவும் சந்தைகள் மற்றும் நிதியுதவிகளை பெறவும் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதித்துறையின் செலவு கொள்முதல் மற்றும்நிர்வாகம் ஆகியவற்றை இலங்கை மேம்படுத்தவேண்டும்- அரசநிறுவனங்களை சீர்திருத்துவது அவசியம்,என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனவும் உலக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எப்போது நீங்கள் இவ்வாறான கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றீர்களோ- நீங்கள் அனுமதி முறையை அறிமுகப்படுத்துகின்றீர்களோ அப்போதெல்லாம் அந்த அமைப்புமுறையை துஸ்பிரயோகம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.