துபாயில் பாரிய போதைப்பொருள் வியாபாரியின் 20 வயது மகன் கோடிக்கணக்கான மதிப்புள்ள 2 வாகனங்களுடன் கைது
துபாய் மாநிலத்தில் பதுங்கியிருந்த பாரிய போதைப்பொருள் வியாபாரி என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் 20 வயது மகன், 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான சொகுசு கார் மற்றும் பிராடோ ரக ஜீப் ஒன்றுடன் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நேற்று முன்தினம் (10) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இந்த இருபது வயதுடைய சந்தேக நபர் சுமார் 250 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் மற்றும் சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றைப் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பிரகாரம், இரண்டு வாகனங்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பயன்படுத்திய கார் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிராடோ ரக சொகுசு ஜீப் அவரது நண்பருக்கு சொந்தமான கார் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பணமோசடிச் சட்டத்தை மீறியதன் காரணமாக சந்தேகநபர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஷிரான் பாசிக் என்ற நபர் பாகிஸ்தானுடன் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும் அவர் ஊடாக ஹரக் கட்டா உள்ளிட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்புவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஷிரான் பாசிக் மொரட்டுவை மாநகர சபையின் தொழிலாளி என்றும்இ பின்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், 2018 ஆம் ஆண்டு துபாய்க்கு தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகன் வெள்ளவத்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல ஹோட்டல்களையும் வாங்கியிருந்தான்.
அந்த ஹோட்டல்களை வாங்குவதற்காக அவர் செய்த வியாபாரம் குறித்தோ, அவர் எப்படி பணம் சம்பாதித்தார் என்றோ இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷிரான் பாசிக் என்ற நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு சட்டவிரோத முறைகள் மூலம் பணம் சம்பாதித்தாலும், ஏழை மக்களுக்கு உதவுகிறார். பார்வை குறைபாடுள்ள நோயாளிகள், புற்றுநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு கண் லென்ஸ்கள் வழங்குகிறார். நிறைய உதவிகள் வழங்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஷிரான் பாசிக்கிற்கு எதிராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு பணமோசடியின் கீழ் அவரது சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.