களனி மற்றும் களுகங்கை தாழ்நிலங்களில் சிறு வெள்ளம்
இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் கண்காணிப்பாளர் பிரித்திகா ஜெயக்கொடி தெரிவித்தார்.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் நிபுணர் பிரித்திகா ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனி ஆற்றைச் சுற்றியுள்ள சில தாழ்நிலப் பகுதிகள் சிறிதளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் இன்று வெள்ளம் சற்று அதிகரிக்கலாம் என நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயிலை கனரக வாகனங்களுக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும் என நெடுஞ்சாலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.