திலினி பிரியமாலி என்ற பெண்ணை தாம் கண்டதே இல்லை - ரஞ்சன் ராமநாயக்க
அண்மையில் பாரியளவு நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலி என்ற பெண்ணை தாம் கண்டதே இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரியமாலியின் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாவினை ரஞ்சன் ராமநாயக்க முதலீடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் சிங்கள பத்திரிகையொன்றிடம் பின்வருமாறு கூறியுள்ளார்.
பிரியமாலியை நான் கண்டதில்லை, அறிமுகமும் இல்லை, மேலும் நான் ஒரு வருடமும் ஏழு மாதங்களும் 14 நாட்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்
எனவே இந்த பெண்ணுடன் நான் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இந்தப் பெண்ணுடன் வர்த்தகம் செய்திருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை அழைத்து விசாரணை நடாத்தியிருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து இயங்கி வரும் சேறு பூசும் இணைய தளங்களில் எனக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பெண் தயாரிக்கவிருந்த திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகளில் நான் பங்கேற்கவில்லை. நல்ல நேரம் நான் அந்த நிகழ்வு நடைபெறும் போது சிறையில் இருந்தேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.