போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக பொலிஸார் கடும் நடவடிக்கை!
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை என அம்பாறை அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார தெரிவித்தார்.
காரைதீவு பொலிஸ் பிரிவிற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழு கூட்டம் நேற்றையதினம்(26) மாலை காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பு உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு வலுப்பெறும் சமூகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பொலிசார் கடமையாற்றி வருகின்றனர்.
எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100 வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது.அத்துடன் உபதேச குழுவின் வகிபாகம் பாரியது. அதன் அதிகாரம் வரையறையற்றது.
முழுப் பொலிஸ் நிலையத்தை கண்காணிக்க முடியும். நான் திருக்கோவிலில் இருந்தபோது அங்குள்ள மக்கள் பாதுகாப்பு உபதேசகுழுவே என்னை காப்பாற்றியது. சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் இப்பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.
தங்கள் உயிர்ப் பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமை உணர்வுடன் எமது கடமையினை செய்கிறோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.