சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய முடிவு
சிறைச்சாலைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 600இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரை (STF) படிப்படியாக மீளப்பெறும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நடவடிக்கைக்காக பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை நீதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படையினர் வெளிப்புற சுற்றளவு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களை சிறப்பான சேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சு கருதுவதாக உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “பொதுத்துறையில் ஆட்சேர்ப்பு முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு அதிரடிப்படையினரின் தற்போதுள்ள மனிதவளத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தற்போது சிறப்பு அதிரடிப்படையினர், சிறைச்சாலைகளுக்கு வரும் பார்வையாளர்களை சோதனையிடுவது உள்ளிட்ட சில சிறிய பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
எனினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.
சிறப்பு அதிரடிப்படையினரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தாமல் சிறைச்சாலைக்கு வெளியே நிறுத்துவது வீணானது. எதிர்வரும் மாதம் முதல் படிப்படியாக அவர்கள் வெலிக்கடை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் பல சிறைச்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
எவ்வாறாயினும் பெருமளவிலான கடுமையான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை வைத்திருக்கும் பூஸ்ஸா சிறைச்சாலையின் வெளிப்புறச் சுற்றளவில் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள்” என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனித்தனியாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பணியாளர்களும் படிப்படியாக மீளப் பெறப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.