பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் - நந்தலால் வீரசிங்க

Kanimoli
1 year ago
 பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் - நந்தலால் வீரசிங்க

நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, வரி திருத்தங்கள், வட்டி விகித உயர்வு போன்றனவே இவ்வாறு கடுமையாக எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவினால் நடத்தப்பட்ட நேர்காணலின் போதே நந்தலால் வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வரி சீர்திருத்தம் மற்றும் IMF செயன்முறை மூலம், எதிர்காலத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேறுவதற்கு எங்களுக்கு ஏதாவது வழி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என அதிபர் ஊடகப் பணிப்பாளர் நாயகம் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர், கடந்த காலத்தில் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை இருந்தது என்றும் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.

அது வேலைத்திட்டத்தின் மூலம் தலைகீழாக மாறிவிட்டது என்றும் வரி மற்றும் நிதிக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வரிக் கொள்கையை ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தினால், நாம் எதிர்பார்த்ததை விட வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, 80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி முறையே 60% மற்றும் 40% ஆக மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வரி முறையை தொடரவேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார்.

அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகம் பங்களிப்பார்கள் என்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் பங்களித்தால் அனைவருக்கும் வரிச்சலுகை அளிக்கலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.