22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி: கரு ஜயசூரிய
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் மற்றும் அரசியல் சக்திகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை எதேச்சதிகார ஆட்சிக்கு மாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 22ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானமானது ஒரு மிக முக்கியமான இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாகும். இது புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த தருணத்தில், அனைத்து அரசியல் சக்திகளும் இந்த சாதனையால் வலுப்பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டை மக்களின் நலனுக்காக எடுத்துச் செல்லும் இந்தப் பணியில் முன்னின்று செயல்படுமாறு கரு ஜெயசூரிய கோரியுள்ளார்.