உச்சமடையும் பணவீக்கம்: இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம்: மத்திய வங்கி ஆளுநர்
பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதியை சரிசெய்ய மேலும் நடவடிக்கைகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 69.8 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் இது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை காட்டி நிற்பதாகவும் கூறியுள்ளார்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளையில், பணவீக்கத்தைக் குறைக்க வங்கிகள் வீதங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை இலங்கை கடந்த மாதம் ஆரம்பித்துள்ள அதேவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய உதவிகள் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியதிற்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப, அதிக வரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பரந்த சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் நவம்பர் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.