நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பதவி விலக வேண்டும் - அஸ்கிரிய தம்மானந்த தேரர்
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து விலக வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்தபடி புதிய அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமைக்காக தாம் பாராட்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மெதகம தம்மானந்த தேரர் இதனை கூறியுள்ளார்.
“எதிர்பார்த்தபடி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
குழுவின் போது நாட்டுக்கு கேடு விளைவிக்கும் சரத்துக்களை உள்ளடக்காமல் நடப்பதே பொருத்தமானது என்றும் நாங்கள் கருதுகிறோம்.
மேலும், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதும், அந்த நாட்டைப் பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படுவதும் கேடு விளைவிப்பதைக் காண்கிறோம்.
இதன்போது, நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பின் அவர்கள் தமது விருப்பத்தின் பேரில் இந்த நேரத்தில் வெளியேறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.