மயிலிட்டி மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு. 

Reha
1 year ago
மயிலிட்டி மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு. 

யாழ்ப்பாண மாவட்டம், மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்போராளி சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று (2022.10.23) மாலை, மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. 

குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய நடைபெற்ற மேற்படி சந்திப்பின் போது, பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் பூர்வீகத் தமிழ் மக்களான மயிலிட்டி மக்களுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காணி சுவீகரிப்புத் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கடிதத்தில் மூவாயிரம் ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன்கீழ், தங்கள் காணிகளும் பறிபோய்விடுமோ என தாம் அச்சமடைவதாகவும் மயிலிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். 

அது தொடர்பிலான முழுமையான விவரங்களோடு, காணி சுவீகரிப்பைத் தடுப்பதற்கான தொடர்நடவடிக்கைகள் குறித்தும் இக் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது. மேற்படி கலந்துரையாடலில், மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தினர், மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.