யால தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 9 பேர் வாகனங்களுடன் சரண்
யால தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 09 பேர், 06 வாகனங்களுடன் யால பூங்கா தலைமையகத்தில் சரணடைந்துள்ளனர்.
குருநாகல், வெல்லவ, வெள்ளவத்தை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 09 பேரே இவ்வாறு சரணடைந்துள்ளதாக ஊவா மாகாண உதவி வனஜீவராசிகள் பணிப்பாளர் உக்கங்ருகம்பக இந்திரஜித் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்களும் வாகனங்களும் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் 36 வாகனங்கள் வந்துள்ளதுடன், யால தேசிய பூங்காவிற்குள் 31 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 100 பேருக்கு பூங்காவிற்குள் நுழைவதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண வனஜீவராசிகள் பணிப்பாளர் தெரிவித்தார்.