சமூக பாதுகாப்பு வரியால் மீண்டும் மின் கட்டணம் உயர்வு
மின்சார கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியும் சேர்க்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 வீதம் 5 பத்தில் வரி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் அனைத்து தரப்பினரின் மின்சார கொள்வனவுக்கான வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்டமையினால் மின்சார பாவனைக்கு உரிய வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு முன்மொழிந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் உரிய வரிக்கு உட்பட்டது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.