கோட்டாபய ராஜபக்சவுக்கு சாபம் பலித்தது - வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர்
ராஜபக்சவினரே நாட்டை அழித்தனர் எனவும் கொள்ளையடிக்கும் சுவை அறிந்தே அவர்கள் விழுந்து,விழுந்து மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சாபம் பலித்தது எனவும் மிகிந்தலை ராஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக வலையெளி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களுக்கு உண்பதற்கும் உணவுகள் இல்லை. மக்கள் மூச்சு விடுவதற்கும் வரிகள் அறவிடப்படலாம். ராஜபக்சவினருக்கு மீண்டும் வாக்களிப்பார்கள் என்றால், அவர்கள் மாடுகளை விட கேவலமான மனித விலங்குகளாக இருப்பார்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் மிகிந்தலையிலேயே வரலாற்றில் அமைப்பு மாற்றம் ஏற்பட்டது. மகிந்த தேரர் இலங்கை வந்திருந்த போது தேவநம்பியதிஸ்ஸன், 40 ஆயிரம் பேருடன் வேட்டைக்கு செல்கிறார்.
அப்போதுதான் மகிந்த தேரர், இந்த அமைப்பு மாற்றத்தை ஏற்பட்ட திஸ்ஸன், திஸ்ஸன் என அழைத்து,ஆயுதங்களை கீழே போடுமாறு கூறி, நீங்கள் நினைத்தாற்போல் விலங்குகளை கொலை செய்ய முடியாது. ஆயுதங்களை எடுத்துச் செல்வோர் பாவிகளாக மாறிவிடுவர் எனக் கூறினார்.
துன்புறுத்தல்களுக்கு முற்றிப்புள்ளி வைத்து, அகிம்சையை ஏற்படுத்தி 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மகிந்த தேரர் அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தினார்.
நாட்டு மக்கள் படும் துன்பங்கள், கஷ்டங்களை நாட்டின் ஆட்சியாளர்கள் இன்னும் உணரவில்லை. நாங்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஊடகங்களில் கூறினோம், எனினும் அவர்கள் இன்னும் உணரவில்லை.
உணர்ந்திருந்தால், நாங்கள்கூறியதை செய்திருப்பார்கள். 1948 ஆம் ஆண்டு முதல் இதுவரை நாட்டை ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்பவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன் விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரும் இந்த நிலைமைக்கு காரணம். 1948 பின்னரும் அதற்கு முன்னரும் உருவான சில குடும்பங்களே நாட்டை ஆட்சி செய்தன. டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க,ஜே.ஆர். ஜெயவர்தன,பண்டாரநாயக்கவினர், ராஜபக்சவினர், விக்ரமசிங்கவினர், சிறிசேனவினர் நாட்டை ஆட்சி செய்தனர்.
இவர்கள் நாட்டுக்கு என்ன செய்தனர். நாட்டுக்காக கொள்கையை உருவாக்கி உள்ளனரா?. நாட்டுக்கு தேசிய கொள்கை இருக்கின்றதா?. வெள்ளையர்கள் நாட்டை கையளித்து செல்லும் போது 5 சதம் கடன் கூட இருக்கவில்லை.
நாட்டில் சரியான அரசியலமைப்புச்சட்டம் இல்லை. ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு தேவையான வகையில் வர்த்தமானிகளை வெளியிடுகின்றனர்.அமைச்சர்களுக்கு தேவையான வகையில் வர்த்தமானிகளை வெளியிடுகின்றனர். தேசிய கொள்கையை இவர்கள் உருவாக்கவில்லை.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தார். அவர் அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல. எனினும் குடியுரிமை பெற்று இரண்டு முறை ஆட்சி செய்தார். அப்போது அமெரிக்க மக்கள் அவர் வேறு நாட்டவர், முஸ்லிம் என எதிர்க்கவில்லை.
அங்கு இனவாதம், மதவாதம் தூண்டப்படவில்லை. அங்கு கருத்தடை கொத்து ரொட்டி, கருத்தடை மாத்திரைகள் பற்றி பேசவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. அது அமெரிக்காவில் இருக்கும் தேசிய கொள்கை.
இலங்கையில் அரசியல்வாதிகள் பிக்குமார் உட்பட முழு நாட்டையும் பிளவுப்படுத்தியுள்ளனர். ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், சகோதர நிறுவனங்கள், புதல்வர்களின் நிறுவனங்கள், நண்பர்களின் நிறுவனங்கள் பணத்தை சம்பாதித்தன.
இல்லாதவர்களை மிதித்து நசித்து போட்டனர்.அவர்களை அடிமையாக மாற்றினர். கடனை பெற்றனர். கடனை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. கடனை பெற்ற ராஜபக்சவினரே நாட்டை சோமாலியா, எத்தியோப்பிய மற்றும் சூடானின் நிலைமைக்கு கொண்டு சென்றனர்.
நாட்டின் தற்போதைய அழிவுக்கு பிரதான காரணம் ராஜபக்சவினர். அவர்கள் கொள்ளையடிக்கும் சுவையை அறிந்தவர்கள், அதன் காரணமாக விழுந்து விழுந்து எழுந்து வருகின்றனர்.அவர்களின் கண்ணுக்கு பணம் தெரியுமேயன்றி, நாட்டுக்கு ஏற்பட போகும் பாதிப்புகள் கண்களுக்கு புலப்படுவதில்லை.
ராஜபக்சவினர் அரசியலில் இருந்து விலகி செல்ல வேண்டும். அரசியலில் இருந்து விலகி வேறு ஒருவருக்கு அதனை ஒப்படைக்க வேண்டும். ராஜபக்சவினர் மாத்திரமல்ல 225 பேரும் விலகி செல்ல வேண்டும்.
இரண்டு முறை மட்டுமே ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வர வேண்டும்.
கொரியா போன்ற நாடுகளில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் அரச பதவிகளுக்கு வந்தால், வழக்கு தொடுக்கப்படும். ஒரு நிறுவனம் இருக்குமாயின் அதில் கணவனும் மனைவியும் இருக்க முடியாது, ஒருவரே இருக்க வேண்டும். மற்றையவர் வேறு வேலைக்கு செல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் நாட்டில், இனவாதம், மதவாதத்தை தூண்ட ஆரம்பித்தனர். தினமும் ஊடகங்களில் பதியூதீன் தினமும் வில்பத்து காட்டை அழித்தார் என செய்தி வெளியிட்டனர். மருத்துவர் சஹாபி தினமும் பெலோப்பியன் குழாய்களுக்கு முடிச்சு போட்டார். பள்ளிவாசல்களில் வாள், கத்திகள் கண்டுபிடிக்கப்படுவதை தினமும் ஒளிப்பரப்பினர்.
இதன் பின்னர், கருத்தடை கொத்து ரொட்டி, கருத்தடை ஆடைகள் பற்றி கூறினர். இதனால், மக்கள் சிங்கள பௌத்தர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைத்தனர்.அப்படி ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் மீது இடிவிழும் என்பதை எவரும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை.