கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அமைச்சர் பணிப்புரை
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திற்குள் முடிக்குமாறும் இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு (ECT) மேற்கொண்ட ஆய்வு விஜயத்தின் முடிவில் அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த அவதானிப்பு விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் முகாமைத்துவம், செயற்திட்ட பொறியியலாளர்கள், செயற்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பங்குபற்றியதுடன், எதிர்கால வேலைத் திட்டத்தை தயாரிப்பதற்கு அனைவரது யோசனைகளும் ஆலோசனைகளும் மிகவும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் (CPEP) கீழ் கிழக்கு முனையத்தில் (ECT) கட்டப்பட்ட பக்கச்சுவரின் மொத்த நீளம் 570 மீட்டர்.
இது 440 மீற்றர் தளத்தைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது பெரிய கப்பல்களைக் கையாளும் திறன் கொண்டது.
முனையத்தின் விளிம்பில் உள்ள ஆழம் 18 முதல் 20 மீட்டர்கள், எனவே முனையம் உலகில் தற்போது உற்பத்தி செய்யப்படும் எந்த அளவிலான கப்பலையும் கையாளும் திறன் கொண்டது.
இங்கு கட்டுமான பணிகள் 2025 ஜனவரியில் முடிவடைய உள்ளது.