யால வனவிலங்கு சரணாலயத்தில் சட்டவிரோத வாகன ஓட்டம்! வனஜீவராசிகள் அமைச்சரின் உறவினர் கைது!
கடந்த வாரம் யால பூங்காவில் வனவிலங்கு சட்டத்தை மீறி வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் அமைச்சர் அமரவீரவின் சகோதரரின் மகன் அமரவீர விதான கங்கணம்கே துலித நுவான் அமரவீர (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்
சந்தேக நபர் வாகனம் செலுத்தாவிட்டாலும் வனவிலங்கு பூங்கா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
யால பூங்கா நுழைவாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து அவர் அடையாளம் காணப்பட்டார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த சம்பவத்தில் தனது சகோதரனின் மகனுக்கு ஓரளவு தொடர்புள்ளதா என்பது இன்னும் தனக்குத் தெரியாது, ஆனால் இந்த சம்பவத்தில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை என்று கடுமையாக மறுத்தார்.
இதில் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்