விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை– அரசியல் போராளி சிறீதரன் எம்.பி.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நெல்லியடி, கரணவாய், கரணவாய் கிழக்கு, அல்வாய் கிழக்கு, சந்நிதி, உடுப்பிட்டி, கெருடாவில், வதிரி, மண்டான், கரவெட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளையும், அத்தாய் பகுதி விவசாயிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் (2022.10.29)அன்று இருவேறு இடங்களில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மேற்படி விவசாயிகள், தாம் 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும், தொடர்ச்சியாகத் தாம் எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாடு, உரக் கொள்வனவில் உள்ள இடர்பாடுகள் என்பவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டதோடு, இதுவிடயமாக எழுத்துமூலக் கோரிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபரோடும், மண்ணென்ணெயை பெற்றுத்தரக் கூடிய ஏனைய தரப்புக்களோடும் தொடர்புகொண்டு உரியகாலத்தில் அவ்விவசாயிகளுக்கான எரிபொருளும், உரமும் கிடைக்க ஆவனசெய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது