இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும்- ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்
இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இந்த நிலைமை மேலும் மோசமடையும் என கூறப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய, ஒகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக ஆக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, கொழும்பின் நகர்ப்புறங்களில் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் அது உணவுப் பாதுகாப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான உதவித் திட்டங்களை மேலும் செயல்படுத்த உலக உணவுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் அவசர உதவித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, உலக உணவுத் திட்டம் 209,344 பேருக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் கூடுதலாக 3.4 மில்லியன் மக்களுக்கு நிபந்தனையற்ற உணவு உதவி (பணம் அல்லது பொருள்), பாடசாலைகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதுவரை 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணமாகவும் வவுச்சர்களாகவும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான 6 மாத காலப்பகுதியில் 101,064 பேருக்கு நிதி உதவி வழங்க 28.86 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.