மலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை
இலங்கைக்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியிருந்தது. அந்த வகையில், இலங்கைக்கு அவசரமாகத் தேவையான மருத்துவப் பொருட்கள் உள்ளடங்கிய நன்கொடையை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
நேற்று மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், நன்கொடையை (63,100 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொதி) மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான விமானப்படைத் தளபதி (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸ் அவர்களிடம் கையளித்தார்.
இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நன்கொடைக்கான விமானப் போக்குவரத்தை நல்கியதுடன், 2022 அக்டோபர் 29ஆந் திகதி கோலாலம்பூரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் ருடு 319 மூலம் அந்தப் பொதி அனுப்பி வைக்கப்பட்டது.