அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி
தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து நடத்தும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணி இடம்பெறவுள்ளது.
'அடக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து நிற்போம், உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம், இளம் சட்டத்தரணிகள் சங்கம், லங்கா ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஊழியர் சங்கம், தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பு மற்றும் இதர தொழிற்சங்கங்கள், வெகுஜனங்கள் என பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருவதாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சமகி ஜனபலவேக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.