வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது -நாமல்
வன்முறை மூலம் எவராலும் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது ஆண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து, அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் ஒரு கட்சியாக தீர்மானங்களை எடுக்கும்போது இலங்கை மக்களின் நலனை எப்போதும் கருத்தில்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கைகள் காரணமாகவே பொதுஜன பெரமுன பெரும்பான்மையான பிரதேச சபைகளில் அதிகாரத்தைப் பெற முடிந்தது என்றும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்று இலங்கை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.
தாம் எப்பொழுதும் ஜனநாயகத்தை பின்பற்றும் கட்சியாக, தமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கேற்ப தமது கட்சியை நவீனமயமாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற வேண்டும். அதுவே ஜனநாயக வழி என்றும் நாட்டில் அதிகாரத்தைப் பெறுவதற்கு வன்முறை ஒரு வழி என்று தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.