பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் 06ஆவது கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபிப்பதுடன் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்தும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளதுடன், அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே அது நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.