புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இறுதியாக இருந்த அமைச்சரவையை சிறிய மாற்றங்களுடன் தற்காலிகமாக நியமித்த நிலையில் புதிய அமைச்சரவை விரவில் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அதேசமயம் நிரந்தர அமைச்சரவையை நியமிக்க திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், நிரந்தர அமைச்சரவையை நியமிக்க முடியாமல் போனது.
பெரமுன தரப்பில் அமைச்சு பதவிகளுக்கு பரிந்துரை
குறிப்பாக பொதுஜன பெரமுன தரப்பில் அமைச்சு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதை ஜனாதிபதி முற்றாக நிராகரித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் சில முறை மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இறுதியாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இணங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வார இறுதியில் எகிப்துக்கு புறப்பட்டுச் செல்ல உள்ள நிலையில் அங்கிருந்து திரும்பியதும் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.