ரஷ்யாவின் Azure Air இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது
மற்றொரு பெரிய விமான நிறுவனமான அஸூர் எயார் மூலம் ரஷ்யாவில் இருந்து இலங்கை செல்லும் முதலாவது விமானம் நேற்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானங்கள் வாரத்தில் 4 நாட்கள் அதாவது வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வெனுகோவோ, டோல்மச்சேவோ, கிராஸ்நோய்ஸ்க் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
Z. F.- 1611 இலக்கம் கொண்ட இந்த முதலாவது விமானம் நேற்று காலை 09.45 மணியளவில் ரஷ்யாவிலிருந்து 333 ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு, விமான நிலையங்கள் மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி அஜித் மென்டிஸ் உட்பட பெருந்தொகையான பிரமுகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.