யாழ் குடாநாட்டில் குழந்தைக்கு நேர்ந்த கதி
யாழ் குடாநாட்டில் குழந்தையொன்று கொடுமையான சித்திரவதைக்கு உள்ளான காணொளி வெளிவந்துள்ள நிலையில், ஊர்காவற்றுறை நீதிவான் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி என்ற வாய்பேச முடியாத இளம்பெண் சுருவிலைச் சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து அதன் மூலம் பிறந்த குழந்தையே மதுமிதா (வயது 04).
கணவனை பிரிந்து இருந்த நிறோஜினி ஒரு மாதத்திற்கு முன்னரே கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பெண் தற்போது மரணமடைந்திருப்பதாகவும், அவரது குழந்தை கொடும் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் படங்களும் காணொளிகளும் வெளியாகி உள்ளன.
ஆனால், இவை எங்கே எப்போது இடம்பெற்றன என்ற விபரங்கள் தெரியவரவில்லை.
இது தொடர்பாக இன்று (08) பகல் ஊர்காவற்றுறை காவல் நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை நீதிவானின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் காவல்துறையினரை பணித்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, கிராம சேவையாளர்களுக்கோ தகவல்களைக் கொடுத்து இக்குழந்தையை மீட்க உதவுமாறு கோரப்பட்டுள்ளது.