இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் கிடைக்கப்போகும் வேலை வாய்ப்பு
தென் கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) முயன்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சருக்கும் தென் கொரிய சர்வதேச கூட்டுறவு மீன்பிடி அமைப்பின் தலைவர் இம் ஜூன் டேக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடற்றொழில் வேலைகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ள நிலையில், சியோலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் கொரிய அரசாங்கம் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் E9 விசாவின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையர்களுக்கான கடற்றொழில் வேலைகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
கொரியாவில் மீன்பிடி வேலைகளுக்காக இரண்டு முறை பயணம் செய்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு E7 அல்லது E 10 விசா வகைகளின் கீழ் மீண்டும் அத்தகைய வாய்ப்புகளைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் துறையில் இலங்கைக்கான முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு கொரிய சர்வதேச கூட்டுறவு வங்கி அமைப்பின் தலைவரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.