கடலில் 25 போதைப்பொருள் பார்சல்களைப் பகிர்ந்த குழுவை கைது செய்ய விசாரணை
ஆழ்கடலில் இரண்டு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட இருபத்தைந்து ஹெராயின் பொதிகளை கடத்தி வந்த மீன்பிடி படகு உரிமையாளர் உள்ளிட்ட மீனவர்கள் குழுவை கைது செய்ய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குடாவெல்ல பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மாத்தறை உப பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 544 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வெளிப்படுத்தியதன் பிரகாரம் பேருவளை, அபேபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 9 கிலோகிராம் ஹெரோயினுடன், ஏழு பொட்டலங்களில் சுற்றப்பட்டு கடலில் மிதக்கும் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி உப பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள் குழுவொன்று பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பொலித்தீன் பைகளில் கடலில் வைத்து இலங்கைக்கு கொண்டுவரும் போதைப்பொருள் ஒருதொகையை கண்டுபிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கடலில் போதைப் பொருள்களை கண்டுப்பிடித்த போது மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்ததாகவும் அதன் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் அவற்றை பகிர்ந்து கொள்வதற்காக கரைக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த மீன்பிடி கப்பலின் உரிமையாளர் மற்றும் ஏனைய மீனவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.