நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்காக சபையில் அனுமதி பெற முடிவு - மஹிந்த யாப்பா அபேவர்தன
நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கான சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் (08-11-2022) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இதனை அவர் அறிவித்துள்ளார்.
அதேபோன்று, நியமிக்கப்படவுள்ள குழுக்கள் தொடர்பில் இன்றைய தினத்தில் இறுதித்தீர்மானத்துக்கு வந்து அனைத்துப் பணிகளையும் ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்குமாறு சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய, இன்று (08) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக்குழுக் கூட்டங்களில் இந்தத் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு (Committee on Banking and Financial Services), பொருளாதார உறுதிப்படுத்தல் குழு (Committee on Economic Stabilization) மற்றும் வழிவகைகள் பற்றிய குழு (Committee on Ways and Means) ஆகிய மூன்று குழுக்களை நியமிப்பது தொடர்பிலும் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.