ஆயுர்வேதத் துறையை உலகம் முழுவதும் பரவச்செய்தல் வேண்டும்!
இப்பூமியையும் அதன் மரபுரிமைகளையும் பாதுகாத்து, மனித வாழ்விற்கு சக்தியை ஊட்டக்கூடிய, இலங்கையின் ஆயுர்வேதத் துறையை, உலகம் முழுவதும் பரவச் செய்தல் வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஆயுர்வேத மருத்துவச் சங்கத்தின் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவு விழாவானது இன்று கொழும்பில் இடம்பெற்ற வேளையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் சட்டதிட்டங்களில் உள்ள குறைபாடுகளுக்கான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதற்கு இனியும் அவகாசம் இல்லையெனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நாட்டின் ஆயுர்வேதத் துறையானது உலகமெங்கிலும் பிரசித்தம் பெற்றிருந்தாலும் வெளிநாட்டுச் செலாவணியை உழைத்துக் கொள்வதற்கு ஒரு சரியான வேலைத்திட்டமொன்று இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். இது தொடர்பில் அண்டை நாடுகள் பின்பற்றும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து, உள்நாட்டு ஆயுர்வேத மத்திய நிலையங்களை நாடு முழுவதும், உலகம் முழுவதும் தாபிப்பதற்கு உடனடி செயற்பாடுகளை முன்னெடுத்தல், தற்போதுள்ள வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.
தற்போது ஆயுர்வேத பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும், இத்தேசிய வேலைத்திட்டத்தில் முனைப்புடன் கைகோர்க்குமாறு பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்தார். இந்நாட்டின் வைத்தியத் துறைக்கு, ஆயுர்வேத வைத்தியத் துறையானது முதுகெலும்பு போன்றது. ஆயுர்வேதத் துறையை பல்கலைக்கழகம் வரை கொண்டு செல்வதற்கு அரச ஆயுர்வேத சங்கமானது ஆற்றிய பணி மகத்தானது. சுகாதாரத் துறையை, ஒரேவிதமான வைத்திய முறைக்குள் மட்டுப்படுத்த முடியாது. உலக சுகாதார அமைப்பும் இதற்கான வாயில்களைத் திறந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பல்வேறு இக்கட்டான நிலைமைகளைக் கடந்து வந்துள்ளோம். தற்போது இன்னுமொரு நெருக்கடியைக் கடந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய எந்தவித நெருக்கடிகளும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது.
உணவுப் பாதுகாப்பிற்கு, சுகாதாரத் துறைக்கு, நோய்களை இல்லாதொழிப்பதற்கு என பற்பல சிறந்த நிகழ்ச்சித்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு காணிகளை விடுவிப்பதற்கும் அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அடுத்து வரும் ஒரு சில மாதங்களுள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்காக விடுவிக்கவுள்ளது. இக்காணிகளில் ஆயுர்வேதத் துறைக்குத் தேவையான பயிர்ச்செய்கைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் அரசு கொண்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.