பல கோடி ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் திலினி பிரியமாலி கைது
பல கோடி ரூபா நிதி மோசடியைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் 4 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன ஊடாக குறித்த வர்த்தகர் திலினி பிரியமாலியை கடந்த மே மாதம் அறிந்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தமக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஐ-போன் 13 ப்ரோ மெக்ஸ் ரக கைப்பேசி ஒன்று தேவைப்படுகின்றது என ஜானகி சிறிவர்தன மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய, குறித்த வர்த்தகர் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
குறித்த கைபேசியை ஜானகி சிறிவர்தனவிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில், திலினி பிரியமாலி மற்றுமொரு நபருடன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தமையை குறித்த வர்த்தகர் அவதானித்துள்ளார்.
இதன்போது, வர்த்தகத்துக்கு டொலர் தேவையேற்படின் திலினி பிரியமாலியை அணுக முடியும் என்று ஜானகி சிறிவர்தன குறித்த வர்த்தகருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
6 வருடகாலமாக திலினி பிரியமாலியைத் தாம் அறிந்துள்ளார் என்றும், அவருடனான வர்த்தகம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜானகி சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த வர்த்தகர் 4 கோடி ரூபாவை திலினி பிரியமாலியுடனான வர்த்தகத்துக்கு வழங்கியுள்ளார்.
குறித்த 4 கோடி ரூபாவுக்கான டொலரை கடந்த மே மாதம் 9ஆம் திகதி தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக வழங்க முடியாதுள்ளது என்று திலினி பிரியமாலியும், ஜானகி சிறிவர்தனவும் குறித்த வர்த்தகருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களாக டொலரைக் கோரி குறித்த வர்த்தகர், திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் காரியாலயங்களுக்குச் சென்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.
எவ்வாறாயினும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தகரிடம் ஜானகி சிறிவர்தன ஐபோன்-13 ப்ரோ மெக்ஸ் ரக 4 கைப்பேசிகளை கோரியிருந்ததுடன், அதனைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அதற்கான பணத்தை வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்படுகின்றது.
அவர் குறித்த கைப்பேசிகளை திலினி பிரியமாலியின் ஆண் நண்பர் எனக் கூறப்படும் இசுறு பண்டார மற்றும் பொரளை சிறிசுமன தேரருக்கு வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
அந்தச் சந்தர்ப்பத்தில் கைப்பேசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகரிடம் பொரளை சிறிசுமன தேரர், தங்களின் பிரச்சினையைத் தான் தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பணத்துக்குப் பதிலாக தங்க கோலைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறிய நிலையில், அதனை குறித்த வர்த்தகர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.