ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் விதித்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து தாலிபான்கள் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது குளிக்கவும் கட்டுப்பாடுகளை விதித்து தாலிபான் அரசு அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். இந்த வேளையில் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் 2001ல் ஆட்சி அதிகாரித்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதன்பிறகு உள்நாட்டு போருக்கு பெயர் பெற்ற நாடாக மாறிய ஆப்கானிஸ்தானில் மக்களாட்சிக்கு எதிரான செயல்களில் தாலிபான்கள் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று முகாமிட்டு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. படிப்படியாக அமைதி திரும்பியது. இருப்பினும் தொடர்ச்சியாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. இதையடுத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தாலிபான்கள் முடிவு செய்தனர். இதையடுத்து உள்நாட்டு போர் துவங்கியது.
மக்களாட்சி வீழ்த்தப்பட்ட நிலையில் தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் நாடு சிக்கியதை தொடர்ந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தஞ்சமடைந்தனர்.
இதற்கு தாலிபான்களின் விதிக்கும் கட்டுப்பாடுகள் தான் முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தாலிபான்கள் கூறினார். ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தாலிபான்கள் தங்களின் வாக்குறுதிகளை மறந்துவிட்டனர்.
ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதில் பள்ளி மாணவிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி செல்ல மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு சாலைகளில் பெண்கள் தனியாக செல்லக்கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. லைசென்ஸ் வழங்கப்படாது. உச்சம் தலை முதல் உள்ளங்ககால் வரை நீல நிறத்திலான புர்கா தான் அணிய வேண்டும். ஓட்டல்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து சாப்பிடக்கூடாது. பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா (அமியூஸ்மெண்ட்பார்க்), ஜிம்முக்கு செல்ல கூடாது என தொடர்ந்து தடை விதித்துள்ளன.
இந்த கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள், பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் கூட தாலிபான்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லாமல் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது இன்னொரு கட்டுப்பாடும் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொது இடங்களில் குளிக்க ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் 'ஹம்மம்' எனும் பொதுவான குளியல் மையம் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இருக்கும்.
இதனை தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்தநிலையில் தான் 'ஹம்மம்' எனும் பொது குளியல் மையம் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆப்கானில் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவம்அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது அகிப் சதேக் மொஹாஜிர் கூறுகையில், ''ஆப்கானிஸ்தானில் தற்போது அனைவரின் வீட்டிலும் குளியல் அறை வசதி உள்ளது.
இதனால் பெண்களுக்கு பொது குளியல் மையம் என்பது தேவைப்படாது. இதனால் தான் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.