கனடா மற்றும் இந்தியா இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்த பிரதமர் ட்ரூட்டோ
கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன.
இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான ஒத்துழைப்பை முன்னேற்றுவது போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின், இந்தோனேசியா நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு பாலி நகரத்தில் நடந்த வர்த்தகம் குறித்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய போது, தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை அறிவிக்க இருப்பதாகவும், அது இரண்டு நாடுகளுக்கும் இடையே அதிக விமானங்களை இயக்குவதற்கானது என்றும் கூறியிருக்கிறார்.