இன்றைய வேத வசனம் 17.11.2022: வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
ஒரு சமயம், என்னுடைய உறவினர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு போகும்படியாக, என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அவர் இயேசு கிறிஸ்துவை அறியாதவர். நான் மிகவும் மகழ்ச்சியுடன் அவரை வரவேற்று, உபசரித்தேன்.
அவர், நான் உன்னை பார்த்து அனேக வருடங்கள் ஆகி விட்டது. அதனால் உன்னை பார்த்து விட்டுப் போகலாம் என்று நினைத்து வந்தேன். என்றார்.
அப்பொழுது அவருடைய வலது கை செயல்படாமல் இருந்ததை நான் கவனித்தேன். ஒருவேளை அதற்காக என்னைப் பார்த்து ஜெபிக்க வந்திருப்பாரோ? என்று நினைத்தேன்.
நான், என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்டபோது, நான் சென்னையில் தொழில் செய்கிறேன். என் வலது கை செயலிழந்து போயிற்று. எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. என்று சொன்னார்.
அப்பொழுது நான், என்னை ஜெபிக்கச் சொல்வார். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ஏன் என்னுடைய கை இப்படி ஆகிவிட்டது என்று உனக்குத் தெரியுமா? என்று அவர் என்னை பார்த்து கேட்டு விட்டு, எப்படியாவது பணக்காரனாகி விட வேண்டும்! என்று எண்ணி, வாடிக்கையாளர்களை ஏமாற்றினேன்.
இந்தக் கையால் கள்ள தராசு பிடித்து, வியாபாரத்தில் ஏமாற்றினேன். அந்த சாபத்தின் விளைவினால்தான் என்னுடைய இந்தக் கை செயலிழந்து போய் விட்டது! என்று சொன்னார்.
இன்றைக்கு தேவ பிள்ளைகளை விட, இயேசு கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் தான் சாபத்தை குறித்த அதிக பயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சாபத்தினால் வரக் கூடிய பாதிப்பை குறித்து, அவர்கள் அதிகக் கவனமாக இருக்கிறார்கள்.
பொது மக்களை ஏமாற்றுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள்! அவர்கள் வியாபாரியாக இருந்தாலும் சரி, அல்லது அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, சாபத்தைத்தான் அனுபவிப்பார்கள். அந்த சாபத்தினுடைய பாதிப்புகள் அவர்கள் மேல் நிச்சயமாக வரும்.
ஆகவே உங்கள் வியாபாரத்தில் நீங்கள் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏமாற்றி சம்பாத்தியம் பண்ணவே கூடாது. கலப்பட பொருட்களை விற்கக் கூடாது. கள்ளத் தராசு பிடிக்கக்கூடாது. உங்கள் தொழிலில் பங்காளர்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும். யாரையும் ஏமாற்றாதீர்கள். அப்படி நீங்கள் ஏமாற்றினால், கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து போவீர்கள். ஆமென்
நீதிமொழிகள் 20:23
வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.