தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது-கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகில் சுற்றுலாவுக்கான மிகச் சிறந்த நாடாக, 2019 ஆம் ஆண்டு லோன்லி ப்லனட் சஞ்சிகை இலங்கையை குறிப்பிட்டிருந்தது. அப்போது 2018 ஆம் ஆண்டு எமது நாட்டிற்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனூடாக நாம் 5.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டியுள்ளோம். ஆனால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைய ஆரம்பித்ததாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு நாம் யாருமே எதிர்பார்த்திராத வகையில் உலகம் பூராகவும் பரவிய கொவிட் வைரஸ் தொற்று எம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. இதனால் எமது பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பன வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு வருமானம் தடைப்பட்டது. இதனூடாக 2021 ஆம் ஆண்டின் இறுதியளவில் எமக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. நாம் எடுத்த சில தவறான முடிவுகளால் நாம் மேலும் ஆதரவற்ற நிலைக்கு உள்ளானோம். அந்த ஆதரவற்ற நிலையில் இருந்து நாம் மீண்டுவரும்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிலை காரணமாக, கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை அதிகரித்தது. சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருவது தடைப்பட்டது. இதனால் எமது நாட்டின் பொருளாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
தற்போது எமது நாடடிற்கு வெளிநாட்டு வருமானம் படிப்படியாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 357 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்று வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு சிலர் ஆதரவளித்தனர். அதனால் நாட்டிற்கு வெளிநாட்டு வருமானம் தடைப்பட்டது. ஆனால் இப்போது படிப்படியாக வழமைக்கு திரும்பியுள்ளது. கடந்த வருடம் நாட்டிற்கு கிடைத்த 57 மில்லியனுடன் குறைந்த பட்சம் 3 அல்லது 4 பில்லியன் டொலர்கள் வருமானம் இந்த வருடம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன், நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதனை வீழ்த்தினர். ஏரோ ப்லோட் விமானம் தொடர்பான சம்பவத்தில் இந்நாட்டின் நீதிமன்றமும் தலையிட்டு அந்த விமானத்தை தடை செயதது. ஆனால் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
இந்த பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடலை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தால், கட்டாயமாக நாட்டிற்கு பொருளாதார ஸ்தீர தன்மை ஏற்படும். இதனூடாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.