மலையகத்தின் மூத்த அரசியல்வாதி முத்து சிவலிங்கம் காலமானார்!
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று அதிகாலை காலமானார்.
நீண்டநாள் நோய்வாய்பட்டிருந்த அவர் நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மிக நீண்ட அங்கத்துவத்தை கொண்டிருந்த அவர், மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.
1959 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் சாதாராண ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு தனது தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் ஒருவராக திகழ்ந்த அவர், சௌமியமூர்த்தி தொண்டமான் மறையும் வரையிலும் அவருடன் இணைந்து செயற்பட்டவர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன் இறுதியில் அதன் தலைவராகவும் இருந்து ஒய்வுபெற்றவர்.
தனது அரசியலை நுவரெலியா பிரதேச சபையின் நியமன தலைவராக ஆரம்பித்து படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக என தனது அரசியலில் மிகவும் உச்ச நிலையை அடைந்த ஒருவர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜயவர்தன, ரணசிங்ஹ பிரேமதாச டி.பி.விஜேதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ச ஆகிய ஜந்து ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்.
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர்.மலையக மக்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.அது மாத்திரமின்றி பல்வேறு போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மலையக மக்களின் சார்பாக பல வெளிநாடுகளில் சென்று தொழிற்சங்க பிரதிநிதியாக கலந்து கொண்டவர். குறிப்பாக ஜெனீவா, அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சுவிஸ்லாந்து உட்பட பல நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த தொழிற்சங்கவாதியான முத்து சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி, சிறு மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.