18 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவருக்கு நீதிமன்றம் பிணை
பிணையெடுக்க யாரும் வராததால் 18 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிணைப்பத்திரத்தில் கையொப்பமிட்ட எவரும் முன்வராத காரணத்தாலும் பிணை தொடர்பில் நீதிமன்றில் வாதிட சட்டத்தரணிக்கு பணம் கொடுக்க முடியாமையாலும் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த கொலைச் சந்தேக நபருக்கு நேற்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்தி பிணை வழங்கியுள்ளார்.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சகுந்தலா கருணாசிங்க, பந்துல கமராச்சி மற்றும் லக்மினி அமரசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய சந்தேக நபரான ஜேம்ஸ் அன்டனி லோரன்ஸ் என்பவரே இவ்வாறு நீதிம்னறினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.