உத்தேச புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு முதற்கட்ட அமைச்சரவை அங்கீகாரம்
உத்தேச புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு முதற்கட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளுடன், தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் அடங்கும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், பல முறைப்பாடுகள் கவனிக்கப்படாமலும், பொறுப்புக்கூறல் இல்லாமல் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, புதிய சட்ட வரைவு, தற்போதைய ஆணைக்குழுவில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதுடன், அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கருத்தின்படி, இந்த புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம், நிதி சுதந்திரத்தில் எந்தவிதமான தலையீடும் இல்லாமல் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவை அனுமதிக்கும் அதேவேளையில், தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி, மாகாண சபை உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இராஜதந்திர ஊழியர்களில் உள்ள அதிகாரிகள் ஆகியோர் தமது சொத்துக்களை அறிவிப்பதை கட்டாயமாக்குவதற்கு 1975ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனச் சட்டம் திருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.