ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் செய்தோரை தண்டிப்பதாக குறிப்பிடவில்லை-அனுரகுமார திசாநாயக்க
தமது வரவு செலவு திட்டத்தில் ஊழல்களை தடுப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் செய்தோரை தண்டிப்பதாக குறிப்பிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அவ்வாறு ரணில் கூறவேண்டுமாக இருந்தால், முதலில் சுயமாக தாமே வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சிறைச்சாலையில் பயன்படுத்தும் காற்சட்டையை அணிந்து கொண்டு, "மத்திய வங்கி ஊழலுக்காக நான் பொறுப்பேற்று இங்கு வந்துள்ளேன். எனவே ஊழல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கூறவேண்டியிருக்கும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிறிபால டி சில்வா கையூட்டல் கோரியதாக ஜப்பானிய அரசாங்கம் முறையிட்டமைக் காரணமாக அவரை கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கினார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க, குற்றம் சுமத்தப்பட்ட, நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையில் முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவை நியமித்து, விசாரணையை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின்போது, நிமால் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் இல்லையென்று முன்னாள் நீதிபதி குறிப்பிட்டதாக அனுரகுமார தெரிவித்தார்.
அனுரகுமார இந்தக் கருத்துக்களை வெளியிட்டபோது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சபையில் இல்லாதோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, முன்னாள் நீதிபதியை குசலா அல்லது சரோ என்று அழைக்கலாமா? என்று அநுரகுமார கேள்வி எழுப்பினார். எனினும் அவரைப் பற்றி தாம் கூறவில்லை. நிமால் சிறிபால டி சில்வாவை பற்றி குறிப்பிடுவதாக அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.
இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொண்ட அனுரகுமார, அவருக்கு என்ன பெயரை தம்மால் கூறமுடியும். அவருக்கு பல பெயர்கள் உள்ளனவே என்று குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க சபையில் இருந்தால், நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர், பில்லியன் கணக்கான பணம் துபாய் வங்கியில் இருப்பதாக கூறப்பட்ட முறைப்பாட்டுக்காக ஜே.சி.வெலியமுன, ரவி வித்தியாலங்கார மற்றும் தில்ரூக்ஷி ஆகியோரை அனுப்பிய பின்னர் என்ன நடந்தது என்று கேட்டிருக்க முடியும் என்று அனுரகுமார தெரிவித்தார்.
எனவே ஊழல்வாதிகளின் தயவில் இருந்து கொண்டு ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக ரணில் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வெள்ளைக்காரர்களை தெரியும் என்பதால், ரணிலை நம்பி, வெளிநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கப்போவதில்லை. நாட்டின் நன்மதிப்பை பொறுத்தே அந்த நாடுகள் உதவிகளை வழங்குகின்றன.
ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது
பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை பெற்ற இலங்கை அதனை திருப்பிச்செலுத்த இரண்டு தடவைகளாக கால நீடிப்பை பெற்றது. எனினும் அந்த நாட்டின் பிரதமர், இலங்கை குறித்த நிதியை, திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உறுதியான கோரிக்கையை தற்போது விடுத்துள்ளார்.
இதுவே இன்று இலங்கை தொடர்பாக வெளிநாடுகள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பாகும்.
யூரியாவை வழங்கிய உலக வங்கி, ஊழல் இடம்பெறக்கூடாது என்பதற்காக கண்காணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. உலகில் எங்கெல்லாம் ஊழல் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் இலங்கையர் ஒருவர் தொடர்புபட்டிருக்கிறார்.
இதுவே இன்று இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் நிலவும் அபிப்பிராயமாகும். இதனை கருத்திற்கொண்டே, நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்க முன்வரும். இதனைவிடுத்து ரணிலுக்காக எந்த நாடும் உதவியளிக்காது என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.