கனடா செல்ல முயன்று வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரிழப்பு!
தற்கொலைக்கு முயற்சித்த வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.
இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.