பெசில் ராஜபக்ஷவிற்கு சிற்றுண்டிகளுக்காக அதிகாரசபை 60,000 ரூபா கட்டணம் செலுத்தியது தொடர்பான தகவலை மறுக்கும் சிவில் வானூர்தி சேவைகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவின் வருகையின் போது முக்கியஸ்தர் பிரிவில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்காக சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபை 60,000 ரூபா கட்டணத்தை செலுத்தியுள்ளதாக வெளியான தகவலை சிவில் வானூர்தி அதிகாரசபை மறுத்துள்ளது.
பெசிலுக்காக ஒரு சதமேனும், தம்மால் செலுத்தப்படவில்லை என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த முக்கியஸ்தர் பிரிவில் வழங்கப்பட்ட உணவுகளுக்காக பெசில் ராஜபக்ச கட்டணத்தை செலுத்தவில்லை என்று முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த பசிலை வரவேற்க சென்றிருந்த 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்காகவே இந்தக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்காத பெசில் ராஜபக்ச, வானூர்தி நிலையத்தின் முக்கியஸ்தர் பிரிவை பயன்படுத்தியமை மற்றும் அங்கு சிற்றுண்டிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில், வானூர்தி மைய தொழிற்சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்தே நேற்று இதற்கான கட்டணத்தை, சிவில் வானூர்த்தி அதிகார சபை செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பெசில் ராஜபக்ச செப்டம்பரில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்
அத்துடன் ஜூன் மாதம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.