முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! விசேட பேருந்துகளும் ஏற்பாடு
தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2022 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்ப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை உறவுகளின் போக்குவரத்து வசதி கருதி நட்டாங்கண்டலில் இருந்து 2 மணிக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து பாண்டியன் குளம் பாலிநகர் அம்பாள் புரம் ஊடாக ஒரு போக்குவரத்து சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விநாயகபுரத்தில் இருந்து 2 மணிக்கு ஆரம்பிக்கும் மற்றுமொரு பேருந்து சேவை துணுக்காய் மல்லாவி ஊடாக இடம்பெறும் எனவும் உறவுகள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்துமாறும் கோரியுள்ளனர்
அத்தோடு மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. நினைவுக்கல்லுக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.