2009 இல் போராட்டம் முடிவுக்கு வந்த காரணம் என்ன? இழைத்த தவறுகள் தான் காரணம். - அமெரிக்காவிலிருந்து உருத்திரகுமரனின் கொழும்பு பேட்டி மீள்பதிவு 

#SriLanka #United_States
2009 இல் போராட்டம் முடிவுக்கு வந்த காரணம் என்ன? இழைத்த தவறுகள் தான் காரணம். - அமெரிக்காவிலிருந்து உருத்திரகுமரனின் கொழும்பு பேட்டி மீள்பதிவு 

இந்தியப் பெருங்கடலில் ஒரு புதிய அதிகார மையம் தோன்றுவதை பிராந்திய மற்றும் உலக வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே 2009ல் போர் முடிவுக்கு வந்ததற்குக் காரணம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், சர்வதேச சக்திகளின் நலனுடன் சரியாகப் பொருந்தாத தமிழர்களின் குறிக்கோளில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர்.

இது ஒரு புவிசார் அரசியல் முரண்பாடு என்று விவரிக்கப்படலாம். சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடு என்ற தமிழர்களின் பெருவிருப்பிற்கும் தற்போதுள்ள சர்வதேச சக்திகளின் நலன்களுக்கும் இடையிலான முரண்பாடு எனலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிறிலங்கா கார்டியன் ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இக்கருத்தினை பதிவு செய்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், நா.தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி என பல்வேறு விடயங்களுக்கு பதிலளித்துள்ளார்.

செவ்வியின் முழுவடிவம் :

1) கேள்வி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமீபத்திய செயற்பாடுகள் குறித்து கூறுவீர்களா ?

பதில்: ஈழத்தமிழர்கள் ஒரு தனித் தேசம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருப்பதுடன் அவர்கள் தமது அரசியல் எதிர்காலத்தை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும் என்பதே எமது பிரதான அரசியல் வேலைத்திட்டமாகும்.

எங்களின் இந்த நிலைப்பாடு சர்வதேச சமூகத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. உங்களுக்குத் தெரியும், பல நாடுகளது முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் ஐ.நா துணைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய சர்வதேச வள அறிஞர்கள் பலர் எங்கள் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள்.

இராணுவ ஒடுக்குமுறைச்சூழல் மற்றும் சுதந்திர அரசு வேண்டுமென்று அமைதியான முறையில் வாதிடுவதைத் தண்டிக்கும் வகையில் சிறிலங்காவில் ஆறாம் திருத்தச் சட்டத்தின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், தாயகத் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மத்தியிலும் எங்கள் கருத்து எதிரொலிக்கிறது.

2022ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிறிலங்காவின் பராளுமன்றில் அங்கங்வகிக்கும் தமிழ் எம்பிக்கள் அனுப்பிய கடிதத்தில், ஆறாவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குமாறு கோரியிருப்பதையும் நான் முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பதிவாளரிடம், தமிழீழத்தில் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாக ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளோம். ஆவணங்களை சட்ட முறைப்படியான தமிழீழ அரசு என்ற ஒன்று உள்ளதென்பதுதான் இந்த இணங்குதலின் அடிப்படை ஆகும். உங்களுக்குத் தெரியும், 1972ம் மற்றும் 1978 ஆண்டு சிறிலங்காவின் அரசமைப்புக்கு தமிழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இறைமை மீள்வு என்ற சர்வதேச சட்டக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் எங்கள் வாதம் அமைகின்றது. இது தொடர்பில் ஐ.நாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் அல் ஹசைன் சிறிலங்கா அரசை ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தமிழீழ அரசை உருவாக்க காத்திரமாக செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சிறி லங்கா அரசாங்கம் தொடர்ந்து தடை விதித்துள்ளமை எமது இலக்கை அடைவதில் எமது திறமைக்கு சான்றாக அமைகின்றது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

2) கே: உங்கள் தந்தை 1979ம் ஆண்டு முதல் 1983 வரை யாழ்ப்பாண மேயராக பணியாற்றி 2020ல் மறைந்த ஒரு அரசாங்க ஊழியர் என்று கேள்விப்பட்டோம். அவர் உங்களுக்கு என்ன மரபை விட்டுச் சென்றார் ?

பதில்: எனது தந்தை அரசு ஊழியர் அல்ல. அவர் ஒரு வெற்றிகரமான குற்றவியல் வழக்கறிஞர். சுதந்திரமான தமிழீழத்தில்தான் தமிழர்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ முடியும் என்று உறுதியாக நம்பினார். அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்திற்கு விசுவாசத்தை வெளிப்படுத்தி சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து, 1983ல் அவர் வழக்கறிஞர் தொழில் பார்ப்பதை கைவிட்டார். அவர் யாழ்ப்பாண நகர மேயராக இருந்த போது, சிறிலங்காவின் அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாசவை வரவேற்க மறுத்தவர் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நேர்மை, உண்மை, கடின உழைப்பு, லட்சியத்தில் அர்ப்பணிப்பு, மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரது அரசியற் பண்பாட்டின் அடையாளங்களாகும்.

3) கே: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாரிசாக நீங்கள் உங்களை அங்கீகரிக்கிறீர்களா?

ப: தமிழீழத் தேசியத் தலைவரின் வாரிசாக நான் என்னைக் கருதவில்லை. எமது தேசியத் தலைவருக்கு வாரிசாக யாரும் இருக்க முடியாது என நான் நம்புகிறேன். இருப்பினும், போராட்டத்திற்கு காத்திரமாக பங்களிக்க எனக்கு தார்மீக மற்றும் அரசியல் கடமை இருப்பதாக உணர்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், தமிழர் போராட்டத்தை சர்வதேச தளத்துக்கு உயர்த்தி, தமிழ்த் தேசியப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கியுள்ளார்.

சுதந்திர அரசிற்கான தமிழர் அரசியல் பெரு விருப்பினை நனவாக்குவதில் அவர் ஆற்றிய சாதனையும் பங்களிப்பும் தொலைநோக்கு பார்வையும் இலக்கை நோக்கி முன்னேற எம்மை வழிநடத்தும். எமது போராட்ட முறை மாறினாலும் இலக்கு மாறாது என்று எமது தேசியத் தலைவர் ஒருமுறை கூறினார். எமது இலக்கை அடைய ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் முன்னேறிச் செல்வோம். சிறிலங்கா ஒரு இனவாத, இனநாயக அரசாகவே இருந்து வருவது எமது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

4) கே: நீங்கள் அவர் இல்லாத குறையை உணர்கின்றீர்களா?

ப: அவரது தொலைநோக்கு, அவரது அர்ப்பணிப்பு, அவரது உறுதிப்பாடு, அவரது பேரார்வம் அவரது தாங்குதிறன் எப்போதும் எம்முடன் இருக்கும்.

5) கே: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்ட பூர்வாங்க ஆவணத்தில் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை 'ஈழகாந்தி' என்று உறுதிப்படுத்தி உள்ளீர்கள். அகிம்சையில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

பதில்: மக்கள் சக்தியை நான் உறுதியாக நம்புகிறேன். முந்தைய கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டது போல், நாங்கள் எங்கள் இலக்கை அடைய வன்முறையற்ற பாதையை தேர்ந்தெடுத்தோம். திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் தியாகப் பாரம்பரியத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர்களும் அகிம்சைப் போராட்ட முறையைத்தான் கைக்கொண்டார்கள்.


6) கே: விடுதலைப் புலிகள் செய்த தவறுகள் என்ன ?

ப: சர்வதேச சக்திகளின் நலனுடன் சரியாகப் பொருந்தாத தமிழர்களின் குறிக்கோளில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். இது ஒரு புவிசார் அரசியல் முரண்பாடு என்று விவரிக்கப்படலாம். சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடு என்ற தமிழர்களின் பெருவிருப்பிற்கும் தற்போதுள்ள சர்வதேச சக்திகளின் நலன்களுக்கும் இடையிலான முரண்பாடு எனலாம்.

2009ல் போர் முடிவுக்கு வந்ததற்குக் காரணம், பெரிய பிராந்திய மற்றும் உலக வல்லரசுகள் இந்தியப் பெருங்கடலில் ஒரு புதிய அதிகார மையம் தோன்றுவதை விரும்பவில்லை என்பதே. தெற்காசியாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் அதிகார அமைப்பிலும் அதிகார சமநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லரசுகள் விரும்பவில்லை.

அம்போந்தோட்டை 99 வருட குத்தகை, 2014 இல் நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மற்றும் கடந்த மாதம் யுவான் வாங் 5 கப்பலின் வருகை போன்றவற்றின் மூலம் சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான தற்போதைய கூட்டு நடவடிக்கை நிரூபணமாகியுள்ளதனைக் கருத்தில் கொண்டு அந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் நிச்சயமாக மாறும்.

7) கே: உங்களின் ஆலோசனைக் குழுவின் அதே ஆரம்ப அறிக்கை சிறிலங்காவில் முஸ்லிம்களின் அவலநிலையைப் பற்றி வருத்தம் தெரிவித்தது மற்றும் மதச்சார்பற்ற அரசை ஆதரித்தது. ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவில் பௌத்த அல்லது இஸ்லாமிய பிரதிநிதிகள் யாரும் இடம்பெறக் காணவில்லை. ஏன்?

ப: சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளரும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறவினராக அமைந்தவருமான வைத்தியக் கலாநிதி பிரையன் செனவிரத்ன, நாடுகடந்த தமிழீழ அரசாங்க மேலவையில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில், தமிழர்களின் மனித உரிமைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கினோம்.

100,000 இற்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட எமது சுதந்திர சாசனத்தில், சிறி லங்கா அரசியலமைப்பில் உள்ளதைப் போன்று வார்த்தைகளுடன் விளையாடுவதை விடுத்து, சுதந்திர சாசனத்தின் 14 ஆவது சரத்தில் 'தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் தமிழீழத்தின் அரச கரும மொழிகளாக இருக்கும்' என்று அறிவித்துள்ளோம்

சுதந்திர சாசனத்தில், முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளத்தை நாங்கள் வெளிப்படையாக அங்கீகரித்துள்ளோம். மேலும், பௌத்த சமயத்துக்கு முதன்மை கொடுக்கும் சிறி லங்காவைப் போல் அல்லாமல், தமிழ் ஈழம் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும், தமிழ் ஈழத்தில் எந்த மதத்திற்கும் முதன்மையான இடம் வழங்கப்பட மாட்டாது என்றும் நமது சுதந்திர சாசனத்தின் 7வது பிரிவு கூறுகிறது. சுதந்திர சாசனத்தை பிரகடனப்படுத்தும் மாநாட்டில் சிறி லங்கா முஸ்லிம் கல்விமான் ஒருவரும் கலந்துகொண்டார் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். எமது தமிழீழ பொது வாக்கெடுப்பு முன்னெடுப்பு தொடர்பாக முஸ்லிம் சமூகத்தினருடன் கருத்தரங்கு நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.


8) கே: சிறிலங்கா தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தனித் தமிழர் தாயகத்தை உருவாக்குவதே ஒரே வழி என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். உங்களின் இந்த நிலைப்பாடு சிறிலங்காவின் கடந்த கால பதிவுகளை மதிப்பிடுவதன் புரிந்து கொள்ள முடியுமா ? வடக்கு கிழக்கில் உள்ள சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையான நோக்கம் உங்களுக்கு இல்லை. ஆனால் யதார்த்தமற்ற இலக்கில் பின்தங்கியுள்ளீர்கள்.. நாங்கள் சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள்.

ப: முதலில் எமது மக்கள் 'சிறிலங்காத் தமிழர்கள்' என்று அடையாளப்படுத்தப்படுவதை நான் திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறேன். நாங்கள் எங்களை ஈழத்தமிழர்கள் என்றும், தமிழீழ மக்கள் என்றும் கருதுகிறோம். சிறிலங்கா என்பது திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களைக் கட்டமைப்பு ரீதியாக இனப்படுகொலை செய்வதில் ஈடுபட்டுள்ள ஒரு சிங்கள, பௌத்த, அடிப்படைவாத அரசாகும், சிறி லங்கா அரசின் இனப்படுகொலைக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரே தீர்வு சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழ அரசே ஆகும்.

அண்மையில், முன்னாள் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், செப்டம்பர் 6, 2022ல் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் 'பெரும்பான்மைவாதத்தை நோக்கிய போக்கு' பற்றியும்,... 'முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இராணுவத்தின் ஆதரவோடும் பெத்த பிக்குகளின் ஆதரவோடும், சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்தை தீவிரமாக முன்னெடுத்தது' பற்றியும் கவலை தெரிவித்தார்

2020 மே 18 அன்று நடைபெற்ற ஐந்தாவது முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவில் கிழக்குத் திமோர் ஜனாதிபதியும், நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஜோஸ் ரமோஸ் ஹோர்டா, 'தமிழர்கள் ஏன் தனிநாடு கோருகிறார்கள் என்பதை ஆளும் சிறி லங்கா அரசு தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும், என்ன தவறு நடந்தது என்பதையும் கண்டறிய வேண்டும்.' என கூறினார்.

சிறிலங்காவின் நீதித்துறையால் சுனாமி பொதுக்கட்டமைப்பு உடைக்கப்பட்டதும், மாகாணசபையின் அப்பட்டமான தோல்வியும், ஒரு அரசியல் தீர்மானம் எட்டப்படும் வரை, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தமிழீழம் என்பது யதார்த்தத்திற்கு மாறான இலக்கு என்று நீங்கள் சொல்வதையும் மறுக்கிறேன். இனவாத சிங்கள மேலாதிக்கத்தினால் நிரந்தரமாக ஆளப்படும் சிறி லங்காவை ஒரு இனவாத அரசாகத் தொடர்வது யதார்த்தமற்ற இலக்காகும்.

தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள் என்ற உண்மையை சர்வதேச சமூகத்தினுள் அதிகரித்து வரும் அதற்கான அங்கீகாரம் நமது சுதந்திரத்தை அடைவதற்கான எமது செயல்முறையை துரிதப்படுத்துகிறது. சட்டமும் தார்மீகக் கோட்பாடுகளும் 'மீண்டும் நிகழாது' என்பதை உறுதி செய்வதற்காக ஈடு செய் நீதியின் வடிவமாக, ஒரு சுதந்திர அரசை உருவாக்குவதே பொருத்தமானதாக தோன்றுகிறது.

இலங்கைத் தீவு இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதாலும், இலங்கைத் தீவின் கடலோரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்பதையும், . பரிணமித்து வரும் அதிகார இயக்கவியலையும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரியும், 1990 முதல், 30 க்கும் மேற்பட்ட நாடுகள் உருவாகியுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை அடையும் திசையில் வரலாறு நகர்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

9) கே: நீங்கள் சிங்களவர்களை வெறுக்கிறீர்களா? நீங்கள் ஒரு சிங்கள பௌத்தருடன் கடைசியாக எப்போது தொடர்பு கொண்டீர்கள்?

பதில்: நானோ அல்லது ஏனைய தமிழ் தலைவர்களோ தமிழ் மக்களோ சிங்கள மக்களை வெறுக்கவில்லை. எமது போராட்டம் பேரினவாத இனப்படுகொலை சிறி லங்கா அரசுக்கு எதிரானது. அமெரிக்காவில் உள்ள பல சிங்களவர்களுக்கு நான் சட்டப் பிரதிநிதித்துவராக வாதாடுகிறேன். என்னிடம் சட்ட பிரதிநிதித்துவம் கோரும் சிங்களவர்கள் தங்கள் குடும்ப வி டயங்களுக்காக எனது ஆலோசனையை நாடுகிறவர்கள் அவர்களில் சிலர் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, முழு நாட்டினதும் ஆட்சியை திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களின் கருத்துப்படி அவர் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நாட்டை ஆட்சி செய்திருப்பார். நியூயோர்க் நகரிலுள்ள புலம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தினரிடையே எனது நற்பெயரை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

10) கே: சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி குறித்து உங்கள் கணிப்பு என்ன?

பதில்: தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கும், தமிழர்களை இராணுவம் தொடர்ந்து அடிபணியச் செய்வதற்கும் ஆன ராணுவ செலவீனங்களே சிறிலங்காவில் தற்போதைய பொருளாதார பேரழிவிற்கு பெரிதும் பங்களிக்கிறது. ஐநா உயர்ஸ்தானிகர், செப்டம்பர் 6, 2022 தேதியிட்ட தனது அறிக்கையில், 'பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 354 பில்லியன் சிறி லங்கா ரூபாய்கள் (1.86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டில் மொத்த அரசாங்க செலவினத்தில் 15வீதம் ஆகும். ″ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேற்கூறியவற்றுடன் இணைந்து, பல தசாப்தங்களாக சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பெறாத நிலையானது ஊழலைப் புரையோடச் செய்து சிறி லங்காப் பொருளியலை அழித்து விட்டது. சமீபகாலங்களில் இடம்பெற்ற இன்னுமொரு காரணி, பயனற்ற திட்டங்களுக்கு அதிக வட்டிக் கடன்கள் சீனாவிடம் இருந்து பெற்றவையாகும். . மற்றும் கோவிட் தொற்றுநோய், உக்ரைன் போர் ஆகியவை ஏற்கனவே சீர்குலைத்த பொருளாதாரத்தை முற்றாக நசுக்கி விட்டன

11) கே: தற்போதைய சவாலை சமாளிக்க சிறிலங்கா மக்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும்?

ப: தற்போதைய பேரழிவை தமிழர்கள் எவ்வாறு ஆதரித்து வெற்றிகொள்வார்கள் என்று இந்தக் கேள்வியை நான் எடுத்துக்கொள்கிறேன். நாம் ஏற்கனவே கூறியது போல் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான் முதல் தேவை. எங்களுடைய தற்போதைய வாக்கெடுப்பு முன்னெடுப்பு சிறி லங்கா அரசின் சம்மதத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கொசோவோவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு செர்பியாவின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டது.

ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அரசியல் தீர்வில்லாமல் சிறி லங்கா பொருளாதார ரீதியில் நிலைபெறும் நாடாக மாறாது. அத்தகைய தீர்வு அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரும். இது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களையும் சிறி லங்காவிலும் முதலீடு செய்யத் தூண்டும்.


12) கே: இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் அங்கம் வகிக்குமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் கால்களை தரையில் ஊன்றி ஏதாவது செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா ?

ப: முந்தைய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் இந்தக் கேள்விக்கும் பொருத்தமானவை என்று நினைக்கிறேன். நான் 1982ம் ஆண்டில் சிறி லங்காவை விட்டு வெளியேறிய போது, எனது ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிறிலங்காவிற்குத் திரும்புவதே எனது நோக்கமாக இருந்தது. 1983 இனப்படுகொலைக்குப் பின்னர், எனது தகமைச் சான்றிதழ்களின் அடிப்படையில், வெளியில் இருப்பதன் மூலம் எமது மக்களின் விடுதலைக்கு காத்திரமான பங்களிக்க முடியும் என உணர்ந்தேன்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ அல்லது அவர்களின் அரசியல் பெரு விருப்பினை முழுமையாக வெளிப்படுத்தவோ இடமில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, நான் தீவுக்கு வெளியே தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நான் திரும்பி வந்து 'தரையில் காலூன்றுவேன்' என உறுதியாக நம்புகிறேன். அது சுதந்திரத் தமிழீழ மண்ணாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!