11,000 வோட்ஸ் உயர் மின்கம்பத்தில் மோதிய வேன்: சாரதி படுகாயம்
காலி - மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பிரதேச செயலகத்திற்கு அருகில் அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (26) இரவு 11.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி - மாத்தறை பிரதான வீதியில் வெலிகம பிரதேச செயலகத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து அஹங்கம நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் மோதி 11,000 வோட்ஸ் உயர் மின்கம்பத்தில் மோதியுள்ளது.
விபத்தின் போது வேனின் சாரதி மாத்திரமே பயணித்துள்ள நிலையில் அவர் வேனுக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை மிகுந்த பிரயத்தனத்துடன் வேனில் இருந்து இறக்கி வாலான அரச வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் மின்கம்பம் வீதியின் குறுக்கே விழுந்துள்ளதுடன், இதன் காரணமாக வெலிகம நகரிலிருந்து பெலன சுற்றுவட்ட வீதி வரையான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், உயர் அழுத்த மின் கம்பி அமைப்பின் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன், வெலிகமவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது மின்சார விநியோகம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபையின் வெலிகம பிராந்திய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.