ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் மோதல்:12 மாணவர்கள் காயம்
ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக கடமையாற்றும் மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு (26) சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்து நடத்தியதாகவும், பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீட வளாகத்திற்கு வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பீடாதிபதி செய்த முறைப்பாடு தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.