பிரிந்து கிடந்து இன விடுதலைக்காக இனி குரல் எழுப்ப முடியாது: சீமான்
பிரிந்து கிடந்து இன விடுதலைக்காக இனி குரல் எழுப்ப முடியாது என்பதை உலகத்தமிழர்கள் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,
தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள். தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள்.
பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால லட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்து போற்றி வணங்குகிற பொன்னாள்.
இந்த நாள் விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காக இன்னுயிரை ஈந்தவர்களை நினைத்து அழுது, புலம்பும் நாள் அல்ல. மாறாக எந்த புனித கனவிற்காக, எந்த தமிழீழ நாட்டை அமைப்பதற்காக, நம் மாவீரர்கள் தங்கள் உயிரை ஈந்தார்களோ, அந்த புனிதக் கனவை நம் நெஞ்சத்தில் நிறைத்து நமக்கு நாமே உறுதி ஏற்றுக் கொண்டு மண்ணின் விடுதலைக்காக களமாடிட, பற்றுறுதி கொள்கின்ற வரலாற்று நாள்.
உலகத்தின் மூத்த குடியென அறிவார்ந்த அறிவியலே அறிவித்த தொன்மம் வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு தாயகத் தமிழகம், தமிழீழம் என்கின்ற இரண்டு தாய் நிலங்கள் இருந்தும் சமகாலத்தில் இறையாண்மை கொண்ட ஒரு தேசம் இல்லை என்பது உலகம் ஆண்ட வண்டமிழ் இனத்தின் மீது கவிழ்ந்த வரலாற்றுப் பெருந்துயரம்.
நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் சொன்னது போல,ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும் என அரசியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் இதுவரை உலகம் கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள்.
தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த
சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.
தமிழ்ப் பேரினம் மட்டுமல்ல, உலக மாந்த இனத்தில் இப்படிப்பட்டவர்கள் எப்படி தோன்றினார்கள் என்று வியக்கும் அளவிற்கு அறிவாற்றலுக்கு ஒரு ஆண்டன் பாலசிங்கம், ஈகத்திற்கு ஒரு திலீபன், படை நடத்தும் வலிமைக்கு ஒரு பால்ராஜ், சமாதான புறா தமிழ்ச்செல்வன், சாதித்த சங்கர், கடும் பகை வென்ற கடாபி, ஆற்றல்மிகு அங்கயற்கன்னி, தீரன் கிட்டு, தமிழுக்கு ஒரு தமிழேந்தி, கடலில் பாயும் ஆற்றலுக்கு ஒரு சூசை, மனித ஆற்றலை மிஞ்சிய நுட்பமும் தீரமும் கொண்ட ஒரு பொட்டு அம்மன், வீரம் நிறைந்த விதுசா என சொன்னால் முடியாத தீர வீரர்களின் பெரும் பட்டியலை நம் மக்கள் ராணுவமான விடுதலை புலிகள் இயக்கம் பெற்றிருந்தது உலகத்தையே வியக்க வைத்தது. போர் முடிந்து 13 ஆண்டு காலம் கழிந்த பின்னும்கூட, இன்றளவும் என்னை நிம்மதி இழக்க செய்வது இது போன்ற வரலாற்று நாயகர்களை இந்த இனம் இனி என்று காணப்போகிறது… என்கிற உணர்ச்சி தான். அத்தகைய வீரமும், அறிவும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிகு மறவர் கூட்டம் கொண்ட மனித ஆற்றலை, அறிவுத்திறனை இந்த இனம் இழந்து விட்டதே என்கிற வலி எப்போதும் எனக்குள் இருக்கிறது.
ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து இத்தனை ஆண்டு காலம் கழித்தும் இன்னும் நிறைவேற்றியப்பாடில்லை. போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் வெள்ளை வேனில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை.
ஒவ்வொரு ஐநா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய வலியாக இருக்கிறது. இன்றளவும் தொடர்ச்சியாக தமிழர்களின் தாயகப்பகுதிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை திணித்து, தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ மண்ணில் இல்லாத இனமாக ஆக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எம் தமிழீழ மண்ணில் சிங்கள படையணிகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. சனநாயகத்தின் வாயிலாக தேர்தல் மூலம் பொறுப்பிற்கு வந்த ஈழ மண்ணின் தமிழின தலைவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டு இருப்பது சிங்கள இனவாத அரசு ஒருபோதும் மக்கள் சனநாயகத்தை மதிக்காது என்கிற நிலையை தெளிவாக காட்டுகிறது. தன் சொந்த நிலத்திலேயே எம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக அடிப்படை வசதிகள் ஏதுமற்று, ஒரு காலத்தில் தலைவரின் தமிழீழ தேசத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்கித் தவித்து வருகிறார்கள்.
இன்று சிங்கள தேசம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டதற்கு முதன்மையான காரணம் எம் தமிழினத்தின் மீது அவர்கள் அநீதியாக நடத்திய போர் தான் என்பதை சிங்களர்களே ஒத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
அரசியல் சூழல்கள் மாறி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் தமிழர்களும் தமிழீழ விடுதலைக்கான தங்களது வியூகங்ளை மாற்றி அமைக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உதிரிகள் போல சிதறி, தனித்தனி குழுக்களாக, தனித்தனி நபர்களாக தான்மை உணர்வே மேன்மை என கருதி, பிரிந்து கிடந்து இன விடுதலைக்காக இனி குரல் எழுப்ப முடியாது என்பதை உலகத்தமிழர்கள் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
ஒற்றுமை ஒன்றே நமது வலிமை அதுவே நமது மாவீரர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கின்ற ஒரே வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித லட்சியத்திற்காக நாம் அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் நமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு இனி நாம் பயணிக்க வேண்டும். எம் ஈழ உறவுகளின் துயர் நீங்க சிங்கள அரசிற்கு கடுமையான அழுத்தங்கள் தரவேண்டிய கடமை எட்டு கோடிக்கும் மேலான தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வருகிற இந்திய அரசிற்கு உண்டு.
தமிழர்களுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கை மாற வேண்டுமானால் இந்தியாவின் அரசியல் நிலைகள் மாற வேண்டும் அதற்கு முதன்மையாக தாயகத் தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மேன்மையுற வேண்டும் என்கின்ற எண்ணம் உலகம் முழுதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு உறுதியாய் உள்ளத்தில் மலர தொடங்கி இருப்பதை நான் நம்பிக்கையாக பார்க்கிறேன்.
தொடர்ச்சியாக உலக அரங்கில் தமிழீழ விடுதலை சார்ந்து நாம் தருகிற அழுத்தங்கள் மூலம் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு சிங்கள அரசை உட்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் ஒருங்கிணைந்த ஒற்றுமையோடு நமது நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதுதான் இந்த மாவீரர் நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதி.
அந்த உறுதியோடுதான் தாயக தமிழகத்தில் “நாம் தமிழர்” என்ற மகத்தான படையைக் கட்டி, எந்த அதிகாரத்தால் நாம் வீழ்ந்தோமோ அந்த அதிகாரத்தை கைப்பற்ற பெரும் பாய்ச்சலோடு பயணித்து வருகிறோம்.
போர் முடிந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இனி அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்று சொன்னவர்கள் கூட மாவீரர்கள் கண்ட கனவை என்ன விலை கொடுத்தேனும் நிறைவேற்றிட தாயகத் தமிழகத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு வருவதை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது நம் காலம். தமிழீழ நாட்டின் அடிமை விலங்கை நம் தலைமுறையிலேயே அடித்து நொறுக்கிட அரசியலாக நாம் வலிமை பெறுவதே ஒரே வழி. அதை நோக்கி தான் மாவீரர் தெய்வங்கள் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மரணம் கண்ணுக்கு முன்னால் நிற்கின்ற அந்தக் கால நொடியில், மங்கா புகழ் கொண்ட மாவீரர்களின் இமைக்காத விழிகளில் உறைந்திருந்த தாயக விடுதலை என்கின்ற கனவு நம்மை ஒவ்வொரு நொடியும் இயக்கட்டும்.
மண்ணின் விடுதலைக்கு உயிரே விலையானாலும் அந்த உயிரையும் தருவதற்கு துணிந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று ஒவ்வொரு நொடியும் எம் சிந்தையிலும், எம் செயலிலும் எம்மை வழி நடத்தட்டும்.
தாய்மண் விடுதலைக்காக மாவீரர் சிந்திய குருதி என்றென்றும் எம் நினைவுகளில் உலராமல்
உள்ளார்ந்த ஆன்ம ஆற்றலாய் ஒளிரட்டும்.
உலகம் இருக்கும் வரை எமது மாவீரர்களின் புகழ் இருக்கும்.அந்தப் புகழ் ஒளியில் எம் தலைவர் பிரபாகரன் கண்ட தமிழீழம் பிறக்கும்.
தாயக கனவில் சாவினை தழுவிய சந்தன பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!
மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.