இலங்கையில் அண்மைக்காலமாக பல்வேறு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

இலங்கையில் அண்மைக்காலமாக பல்வேறு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
எனவே, அறியப்படாத தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது முறையான சரிபார்ப்பின்றி வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் தவறான தகவல்களைத் தந்து தனிநபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புக்கள் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு உறுதியளித்தல் அல்லது பல்வேறு மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பொதிகளை பெறுவதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துமாறு கோருதல் போன்ற மோசடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபடும் மோசடி செய்பவர்கள், பணத்தை வைப்புச்செய்யத் தூண்டும் வகையில், வங்கி அட்டைகளின் பிற்புறமாக உள்ள கடவுச்சொற்கள் போன்றவற்றை ஆகியவற்றைக் கோரலாம்.
எனினும் இதனை ஏற்று இரகசிய தகவல்களை எந்த மூன்றாம் தரப்பினருடனும் பகிரக்கூடாது என்றும், இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து 011-2477125 அல்லது 011-2477509 என்ற தொடர்பு எண்களின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி கோரியுள்ளது..



