500 ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்

ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு MV Silver Spirit என்ற பயணிகள் கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய இந்தக் கப்பல் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான அஷ்ரோப் ஜெட்டியை வந்தடைந்தது.
திருகோணமலை துறைமுகத்திற்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை வரவழைத்துள்ள மிகப்பெரிய பயணிகள் கப்பல் இதுவாகும் என துறைமுக அதிகார சபையின் திருகோணமலை வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.
இந்தக் கப்பலில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் திருகோணமலை, சீகிரியா, தம்புள்ளை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பகுதிகளுக்கு ஒரு நாள் சென்று தாய்லாந்து நோக்கிச் செல்வதாக வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.
கப்பல் திருகோணமலைக்கு வந்து மீண்டும் புறப்படும் வரை மேற்கொள்ளப்படும் செயற்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு மாத்திரம் சுமார் 21 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் என துறைமுக அதிகார சபையின் திருகோணமலை வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா மேலும் தெரிவித்தார்.



